Tuesday, October 21, 2008

ராஜீவ் காந்தியின் தீபாவளிக் கொண்டாட்டம்...!

1987 ம் ஆண்டு ஈழத்தமிழர் வாழ்வில் நிறையவே நடைபெற்றது. இந்தியா அமைதிப்படை என்ற போர்வையில் ஒரு அழிப்புப்படையை ஏவிவிட, அது விடுதலைப்புலிகளை அழிக்கிறோம் என்ற போர்வையில் அப்பாவிகளை பலியெடுத்தது. விமானத்தில் இருந்து முதலில் உணவுப்பொட்டலங்கள். பின்னர் ஒப்பந்தம். திலீபனின் உயிர் பறிப்பு. குமரப்பா, புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் தீருவில் தீ. முதல் பெண் மாவீரர் ஆகி மாலதி மரணம். இன்னும் இன்னும். அதன் தொடர்ச்சியாய் அப்பாவிகள் மீதான படுகொலை.

ஒக்ரோபர் 21, 1987 அன்று பாரத மக்கள் ஏன் அனைத்து இந்து மக்களும் நரகாசுரனை வதம் செய்த தீபாவளி திருநாளை குதூகலமாக கொண்டாடுகிறார்கள். ஆனால் யாழ்ப்பாணக் குடாநாடோ சோபையிழந்து அந்நிய இராணுவத்தின் அகோரப்பிடிக்குள் அகப்பட்டு சின்னாபின்னமாகி கொண்டிருந்தது. யாழ்ப்பாண கோட்டையில் இருந்து இந்திய இராணுவம் வடக்கு நோக்கி ஒரு முன்னேற்ற முயற்சியில் இறங்கியது. அதற்கு ஆதரவாக கோட்டையில் இருந்து செறிவான எறிகணைத் தாக்குதல் நடாத்தப்படுகிறது. அது யாழ்ப்பாணத்தின் எல்லாப் பாகங்களிலும் விழுந்து வெடிக்கிறது. மக்கள் அல்லோலகல்லோலப்பட்டு அலறியடித்துக்கொண்டு ஓடுகிறார்கள். நிறைய எறிகணைகள் யாழ் மருத்துவமனையை பதம் பார்க்கிறது. பாதுகாப்புக்கு வைத்தியசாலை சிறந்தது என் எண்ணி அதற்குள் ஏராளமானோர் நுழைகிறார்கள். மதியம் ஆரம்பித்த தாக்குதல் இடைவெளி இன்றி தொடர்கிறது.
இப்போது எறிகணைகள் மருத்துவமனையின் நோயாளர் விடுதிகளிலும் வீழ்ந்து வெடிக்கிறது. எல்லோரும் கதறியழுதவாறு சிதறி ஓடுகிறார்கள். சிலர் மேல்மாடியில் இருக்கும் எக்ஸ்ரே அலுவலக அறைக்கும், வைத்தியசாலை அலுவலக அறைக்கும் ஓடுகிறார்கள். மேல்மாடி என்பதால் பாதுகாப்புக்கு உகந்தது என எண்ணியிருக்க கூடும். இதற்குள் காயம் அடைந்தவர்கள் ஒருபுறம். உயிர் பிரிந்த உடலமாக கிடந்தவர்கள் ஒருபுறம். மாலை 4.40 மணியளவில் இராணுவம் மேற்கு பக்கமாக வைத்தியசாலைக்குள் நுழைகிறது. ஊழியர்கள் தமது சீருடைகளை தரித்து நிற்கின்றனர். மருத்துவர்களும் தத்தமது உடைகளை அணிந்து அச்சத்துடன் செய்வதறியாது நிற்கின்றனர். இராணுவம் சுட்டபடி உள்ளே நுழைகிறது.
"நாங்கள் ஊழியர்கள்" என்று ஆங்கிலத்தில் ஊழியர்கள் கத்துகிறார்கள். நாங்கள் "சிவிலியன்ஸ்" எனப் பொதுமக்கள் கத்துகிறார்கள். இரத்த வெறி பிடித்த இந்திய இராணுவத்திற்கு இது விளங்குமா? சுட்டுத்தள்ளுகிறது. ஐயோ அம்மா! முருகா! முருகா!! என குழறல் சத்தம் கேட்கிறது. பின்னர் சூட்டுச் சத்தம். இப்போது அந்த குழறல் சத்தங்கள் அடங்குகிறது. நிலைமை மோசமாகிவிட்டதை உணர்ந்த அப்பாவி நோயாளர்கள் இங்கும் அங்கும் திகிலுடன் ஓடுகிறார்கள். அங்கே நின்ற ஒரு சிறுவனும் (வயது 15) சிதறி ஓடுகிறான். அவனது தந்தை ஒரு வைத்தியசாலை ஊழியர். இப்படி ஒவ்வொரு விடுதியாக இராணுவம் நுழைந்து தனது மிலேச்சத்தனமான கைவரிசையை காட்டி கொண்டிருக்க இருள் சூழ்ந்து கொண்டது. எல்லோரையும் பயம் கவ்விக்கொண்டது. செய்வதறியாது கட்டில்களுக்கு கீழே படுத்தவர்களும், இறந்தவர்களோடு இறந்தவர்களாக பாவனை செய்து படுத்தவர்களும் என நோயாளர்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு இருந்தனர். இரவு எங்காவது காயம் அடைந்தவர்களின் முனகல்சத்தம் கேட்கும். அந்த இடத்தை நோக்கி 'டுமீல்' 'டுமீல்' என துப்பாக்கி ரவை பாயும். பின்னர் அந்த சத்தம் அடங்கி விடும். இவ்வாறு அன்று இரவு முழுவதும் முனகல் சத்தமும் பின்னர் சூட்டுச் சத்தமும் நடந்தது. ஏன் என கேட்காமல் அப்பாவிகளை சுட்டுத்தள்ளி தனது கொலைவெறிகளை தீர்த்துக்கொண்டது.
அடுத்தநாள் காலை விடிந்தது(22-10-1987). காலை 8மணியளவில யாரோ ஒரு பெரியவர் இராணுவத்துடன் நோயாளர்களுக்காகவும் நிலைமைகளுக்காகவும் வாதாடினார். பின்னர் வழமைபோல சூட்டுச்சத்தம். ஆட்கள் அலறித்துடித்தபடி வீழ்ந்தனர். அவர் வேறுயாருமல்ல வைத்திய நிபுணர், கலாநிதி அ.சிவபாதசுந்தரம். அவரோடு இறந்தது சில தாதிமார்கள். இச்சத்தம் எல்லா விடுதிகளுக்கும் கேட்டது. மிகுதியாக உயிருடன் இருந்தவர்களை இது உலுப்பி எடுத்தது. என்ன நடக்கும் என அச்சத்தில் இருந்தார்கள்.
10.30 மணி உயிருடன் இருப்பவர்களை கைகளை உயர்த்தியபடி வெளியே வரச்சொல்கிறது இராணுவம். அச்சத்துடன் எல்லோரும் என்னநடக்குமோ என எண்ணியபடி வெளியே வருகிறார்கள். அங்கே இறந்த உடல்கள் எல்லாம் பனங்கிழங்கு அடுக்கியது போல கிடந்தது. வீங்கிய உடல்கள். சிதறிய உறுப்புகள் என பார்ப்பதற்கு கோரமாக இருந்தது. அதற்குள் காயப்பட்டு குறை உயிரில் இருந்தவர்களும் அடங்குவர். அந்த சிறுவனும் நண்பனும் வெளியே வருகிறார்கள். அவனுடைய தாயாருடன் ஒரு தம்பி முன்னே செல்வதை காண்கிறான். வெளியே செல்கிறான். ஆனால் அவனது தந்தையாரையும் இரண்டு தம்பிமாரையும் காணவில்லை. எண்ணங்கள் பலவாறாக ஓடுகிறது அவனுக்கு. விறாந்தையில் கிடந்த உடல்கள் இரத்தவெள்ளத்தில் கிடந்தது. இரத்தவாடை மிக மோசமாக இருந்தது. உடலங்களுக்கும், இரத்தவெள்ளத்திற்குள்ளாலும் எல்லோரும் வெளியே வருகிறார்கள். கைகளை கூப்பியபடி கிடக்கும் உடலங்கள் (கும்பிட கும்பிட சுட்டிருப்பார்கள்), மகனை கட்டியணைத்தபடி கிடக்கும் தாய், தந்தை உடலம் என மிகவும் உருக்கமாகவும் கோரமாகவும் காட்சியளித்தது.
அவன் தந்தையை தேடினான். எங்கும் காணவில்லை. இரவு சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களில் உற்வினர் இருந்தால் பார்ப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர். அவனும் சென்று பார்க்கிறான். அங்கே அவனது தந்தையின் உயிரற்ற உடலத்தைப் பார்க்கிறான். திகைத்துப்போகிறான். தம்பிமாரை காணவில்லை. அங்கே காயமடைந்த ஒருவர் சொல்கிறார், "தம்பி உங்கள் அப்பா காயமடைந்த ஒருவர் தண்ணீர் கேட்ட போது, மேசையில் இருக்கும் தண்ணீரை எடுத்துக் கொடுக்க முயன்ற வேளை சிப்பாய் ஒருவனால் சுடப்பட்டு இறந்தார். மனம் கொதித்தான். இருந்தும் நிலைமை மோசம். என்ன செய்ய முடியும்.

இனி தகனக்கிரியைகளை நடத்தவேண்டும் என ஒரு வைத்தியரை அணுகிகேட்க, அவரும் இராணுவத்துடன் தொடர்பு கொண்டார். பிரேத அறைக்கு அருகில் இருந்த வெளியில் எல்லோர் சடலங்களையும் அடுக்கி வைத்திருந்தனர். அந்த சிறுவனின் தந்தையின் உடலை ஒரு கரையாக வைத்து தீயை மூட்ட சொன்னார்கள். அவனும் தீயை மூட்டினான். அவனை கொண்டே ஏனைய உடல்களுக்கும் தீ மூட்டுவித்தனர். எல்லோர் உடல்களும் தீயுடன் சங்கமமாகியது. 15வயது சிறுவன் 70ற்கு மேற்பட்ட உடலங்களுக்கு தீ வைக்கிறான். இந்த கொடுமை எங்கும் நடக்குமா.

ஒருமாதத்தின் பின்னர் அவனது தம்பியரைக் கண்டுபிடித்தான் அந்த சிறுவன். அவர்கள் கூறினர். "உங்களை இராணுவம் சுடத்தான் (22.10.1987 காலை) கூட்டிக்கொண்டு போறான் என நினைத்து, நாம் காயப்பட்டவர்களுடன் கிடந்து பின்னர் நல்லூரிற்கு தப்பி ஓடி வந்தோம் என்றனர்.

இந்திய இராணுவத்தின் இந்த காட்டுமிராண்டித்தனத்தால் 70 ற்கு மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்டணர். அவர்களில் 23 வைத்தியசாலை ஊழியர் அடங்குவர். மூன்று சிறப்பியல் வைத்திய நிபுணர்களும் அடங்குவர். விபரம்....
 • வைத்திய கலாநிதி அ. சிவபாதசுந்தரம்
 • வைத்திய கலாநிதி எம்.கே. கணேசரட்ணம்
 • வைத்திய கலாநிதி பரிமேலழகர்
 • தலைமைத்தாதி திருமதி வடிவேலு
 • தாதி திருமதி லீலாவதி
 • தாதி திருமதி சிவபாக்கியம்
 • தாதி ராமநாதன்
 • வாகன ஓட்டுநர் சண்முகலிங்கம்
 • தொலைபேசி இயக்குநர் கனகலிங்கம்
 • கள மேற்பார்வையாளர் கிருஷ்ணராஜா
 • கள மேற்பார்வையாளர் செல்வராஜா
 • கோ.உருத்திரன்
 • க.வேதாரணியம்
 • இரத்தினராஜா
 • மு.துரைராஜா
 • மெ.வரதராஜா
 • இரா.சுகுமார்
 • க.சிவராஜா
 • க.சிவலோகநாதன்
 • சி.ஜெகநாதன்
 • இரா.சுப்பிரமணியம்
 • எஸ்.மார்க்கண்டு
 • க.பீற்றர்

இன்று அந்த சிறுவன் ஒரு விடுதலைப் போராளி. எவைகள் எமது போராளிகளை உருவாக்குகின்றன். எவைகள் எமது விடுதலைப் போராட்டத்தை விரைவு படுத்தும் என்பதற்கு இவை சான்றுகள்.

ஈழத்தமிழர் வாழ்வில் நடைபெற்ற இந்த துன்ப நிகழ்வுகளின் பதிவுகள் தொடரும்....!

இதே தினத்தில் கொல்லப்பட்ட அனைவருக்கும் எமது கண்ணீர்ப்பூக்களை காணிக்கையாக்குகின்றோம்.

"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"

படங்கள் நன்றி : தமிழ்நெற், State Terrorism, TamilNation

11 comments:

Anonymous said...

the unfortunate to the tamils is ,,,, again we are falling on towards the legs of india
...stupid central gov of india

Anonymous said...

Yah. I agree with u. We cant forget this unforgettable event. Really hard to remind that.

அருண்மொழிவர்மன் said...

உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாடான இந்தியாவால் நடாத்தப்பெற்ற மிகப்பெரும் காந்தீயக் கொலை

Unknown said...

manadhai urukkum sambavam...innum urimaikakavum uyirukakavum poradum jeevangalpadum thuyaram...verum vaai pechodu nirkum arasiyal vadhigaluku eppadi puriyum

வாகுகன் said...

நன்றி அருண்மொழிவர்மன், வருகைக்கும் பதிவுக்கும். நிச்சயமாக இதை எவராலும் ஏற்றுக்கொள்ளவும், நியாயப்படுத்தவும் முடியாத வருத்தமான நிகழ்வு. மாறாத வடுவை ஈழத்தமிழர் வாழ்வில் ஏற்படுத்திவிட்டது.

வாகுகன் said...

வணக்கம் சங்கீதா! உங்களின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிகள். நிச்சயமாக அரசியல் கதிரைகளை அணிசெய்யும் அரசியல் வாதிகளுக்கு இந்த துயரங்கள் தெரிவதுமில்லை. அப்படியே தெரிந்தாலும் அதைப்பற்றி பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. எம்மை நாமே காப்பாற்றி ஆள வேண்டும். அதுவே காலத்தின் நியதி.

Anonymous said...

ஜீலியன் வாலாபாக்கில் ஜெனரல் டயர் எப்படிக் கொலை செய்தானோ அப்படியே ராஜிவ் காந்தியும் செய்த கொலைகள் இவை. இந்தியர்களால் எப்படி ஜாலியன் வாலாபாக்கை மறக்கமுடியாதோ அதேபோல் எந்த ஈழத்தவர்களாலும் யாழ் மருத்துவமனைக் கொலைகளையும் வல்வைப் படுகொலைகளையும் மறக்கமுடியாது.

சி.பி.செந்தில்குமார் said...

கலங்க வைக்கிறது

paramesh said...

உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாடான இந்தியாவால் நடாத்தப்பெற்ற மிகப்பெரும் காந்தீயக் கொலை

paramesh said...

உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாடான இந்தியாவால் நடாத்தப்பெற்ற மிகப்பெரும் காந்தீயக் கொலை

பாவேந்தன் said...

நன் இந்தியனாக பிறந்ததற்கு வெட்க படுகிறேன் ...