Saturday, June 13, 2009

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் ஆனால் தர்மமே வெல்லும்

தமிழர் தேசம் சிங்கள தேசத்தால் வெற்றி கொள்ளப்பட்டுள்ளது. சிங்களதேசம் வெற்றிவிழாவைக் கொண்டாடி மகிழ்கின்றது. படையதிகாரிகளுக்கும் படைவீரர்களுக்கும் பதவியுயர்வும் பரிசில்களும் வழங்கப்படுகின்றன. வன்னிப்பகுதியின் ஒவ்வொரு பிரதேசமும் கைப்பற்றப்படும் போது சிங்கக்கொடிகளைப் பறக்கவிட்டு தமிழர் பிரதேசங்களை கைப்பற்றுவதாக கூறியது. எனவே சிங்கள தேசம் வெளிப்படையாக தமிழர்களை வென்றதாக கூறி நடத்தும் வெற்றிவிழாக்களும் நிகழ்வுகளும், சிங்களம் கூறியது போல பயங்கரவாதத்திற்கு எதிரான போர் வெற்றி என்பதற்கு மாறாக தமிழீழம் என்ற ஒரு நாட்டின் பகுதிகளை கைப்பற்றி நிகழ்த்தப்பட்ட வெற்றிக்கூத்தாட்டங்களகவே கருதவேண்டியுள்ளது. இலங்கைத்தீவில் தமிழீழ தனியரசு இருந்ததை மீண்டுமெருமுறை உறுதிப்படுத்தி நிற்கின்றது.

இலங்கைத்தீவில், தமிழ்மக்கள் திறந்த வெளிச்சிறைச்சாலைகளிற்குள்ளும் வன்னியிலிருந்த மக்கள் சிறையகதிமுகாம்களுக்குள்ளும் அடைக்கப்பட்டுள்ளார்கள். மிகமோசமாக, கிட்லரின் முறையில் அம்மக்கள் நடத்தப்படுகின்றார்கள். இலங்கை தீபகற்பத்தில், தமிழனுக்கு எந்தவிடத்திலும் எவ்விதமான பாதுகாப்பும் இல்லாத அச்சமான சூழ்நலையிலேயே வாழ்கின்றனர். அரசாங்கத்திற்கு முண்டு கொடுத்து நிற்கின்ற தமிழ் அரசியல்வாதிகளால் கூட அகதிமுகாமில் வாழும் மக்களின் துயரத்தை நீக்கமுடியாதநிலை அவர்களின் கையாலாகத்தனத்தை காட்டுகின்றது. இவ்வாறு பல இன்னல்களுக்குள் தமிழ்மக்கள் சிக்கத்தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் பல ஊடகங்கள் தமிழ்மக்களின் இன்னல்களை வெளியுலகிற்கு முனைப்பாக கொண்டு சென்றுகொண்டிருந்தாலும் சில ஆய்வாளர்கள் விடுதலைப்புலிகளின் பின்னடைவை விமர்சிப்பது தற்காலத்திற்கு பொருத்தமானதாக இல்லை.

அது மட்டுமில்லாது 30 வருடங்களிற்கு மேலாக மிகுந்த சிரமங்களிற்கு மத்தியில் போராடி 25000 க்கும் மேற்பட்ட போராளிகளை அர்ப்பணித்து தமிழர்களுக்கான அடையாளத்தை, பாதுகாப்பை, போரிடும் ஆற்றலை, நம்பிக்கையை, சுதந்திர போராட்ட தந்திரோபாயங்களை மக்களின் மனங்களில் விதைத்து, தமிழ்மக்களின் மனங்களில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்திருக்கும் தேசத்தலைவனையும் அவன் சார்ந்து வீரச்சாவடைந்த பல்லாயிரம் போராளிகளையும் பொறுப்பாளர்களையும் விமர்சிக்கும் சிலரின் சுடலை நியாயம் போன்ற கருத்துவாதங்கள் வேதனையையும் எரிச்சலையும் தருகின்றன.

சிங்களப்படையின் போர் வெற்றியென்பது தனியே சிங்களப்படைகளின் வெற்றியல்ல 20 மேற்பட்ட வல்லரசு நாடுகளின் ஆலோசனை, ஆயுத உதவி, போர் வீரர்கள் உதவி, தொழில்நுட்ப உதவி, செய்மதித் தகவல்கள் போன்று பல்வேறு வகையான உதவிகளையும் பெற்றே சிங்களப்படை போரிட்டது மாறாக தலைவர் தனியொருவராக தமிழ்மக்களின் உதவியுடன் போராளிப்படையை வழிநடத்தி போரிட்டார், எனவே இப்பிரதேச இழப்பு என்பது தமிழர் படை சிங்களப்படையிடம் தோற்றதாக கருதமுடியாது மாறாக பலநாடுகளால் வலுவூட்டப்பட்ட, குறிப்பாக படைவீரர்களின் உதவியைப் பெற்றே விடுதலைப்புலிகளின் பிரதேசத்தை கைப்பற்ற முடிந்ததே தவிர விடுதலைப்புலிகளை முற்றுமுழுதாக அழிக்கவுமில்லை அழிக்கவும் முடியாது. இது உலகறிந்ததே. தற்போது புலிகள் ஆயுதங்களை மௌனித்திருக்கின்றார்களே தவிர ஆயுதப்போராட்டத்தை கைவிடவில்லை.

14 வயதில் தனது போராட்டத்தை தொடங்கி பல இன்னல்களுக்கும் இடர்பாடுகளுக்கும் மத்தியில் போராட்டத்தை கொண்டு நடத்திய தலைவன், 3 தசாப்தகால போராட்டத்தில், உலக அரசியல், அதன் போக்கு அதாவது உலக அரசியல் என்பது உலகநாடுகளின் நலன் சார்ந்த அரசியலா? அல்லது நடுநிலையான அரசியலா? தமிழினத்தின் விடுதலைப்போராட்டத்தில் இந்த சர்வதேசம் எவ்வளவு தூரம் இதயசுத்தியோடு செயற்படும்? என்பதை புரியாமலா, உலகம் வியந்த பாரிய விடுதலைப்போராட்டத்தை நடத்தியிருப்பார் என்ற கருத்துவாதத்தை எவ்வாறு வைக்கமுடியும்? இந்த சர்வதேச அரசியல் எப்போதாவது தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படும்போது, அவர்கள் அரச பயங்கரவாதத்ததால் துன்புறுத்தப்படும்போது, தமிழ்மக்கள் தீர்வு தொடர்பான கரிசனையுடன் செயற்பட்டதா? 2000ம் ஆண்டு யாழ்குடாநாட்டை கைப்பற்றிக் கொண்டு விடுதலைப்புலிகள் இராணுவ நகர்வை செய்தபோது இந்தியா தலையிட்டு போரை நிறுத்தி சிங்கள இராணுவத்தை காப்பாற்றியது. பின்னர் 2002 வரை புலிகளின் கடுமையான போரை எதிர்கொள்ளமுடியாமல் சிங்களம் சிக்கித்தவித்த போது சர்வதேசம் தலையிட்டு விடுதலைப்புலிகளின் இராணுவச்சமநிலை எற்றுக்கொள்ளப்பட்ட உடன்படிக்கையை கொண்டு வந்து சிங்களத்தை காப்பாற்றியது. எனவே சர்வதேச சமூகம் என்பது உரிமைக்காக போராடும் இனங்களின் உரிமைகளை பெற்றுக் கொடுக்க முயற்சிக்கும். அதை நம்பி செயற்பட்டு ஒரு தீர்வை தமிழ் மக்களுக்கு வைக்கலாம் என்று யாராவது தலைவருக்கு ஆலோசனை சொல்லியிருக்கலாமா? அப்படியாயின் இடைக்கால தன்னாட்சி அதிகார சபையினடிப்படையிலான உரிமைகளை வழங்குவதற்கான ஏற்பாட்டை சர்வதேச சமூகம் சரியாக வழிநடத்தியதா? எந்த அரசியல் தீர்வுகளிலும் தொடர்புபடாத சுனாமி பொதுக்கட்டமைப்பு செயலிழக்கம் செய்யப்பட்டபோது, அதை தடுத்து நிறுத்தி ஒரு அனர்த்த நிவாரண உடன்படிக்கையை கூட செயற்படுத்தமுடியாத சர்வதேச வல்லரசுச் சக்திகளின், கேந்திர நலன்களை சார்ந்து மாறி வரும் உலக ஒழுங்கிற்கு ஏற்ப மாற்றங்களை செய்யவேண்டும் என்பது எந்த வகையில் பொருந்தும்? நடுநிலை, மனிதாபிமானம் என்பவற்றுக்கு அப்பால் பொருளாதார நலன் கொண்டு சிந்திக்கும் சர்வதேசம், தமிழ் மக்களின் அபிலாசைகளை உள்ளடக்கிய தீர்வுத்திட்டத்தை பெற்றுத்தரும் என்ற கருத்தை தலைவருக்கு எவ்வாறு கூறமுடியும்? அப்படி கூறுபவர் மேற்குறிப்பிட்ட கேள்விகளுக்கு என்ன பதிலை தலைவருக்கு கூறுவார்? விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட பின்னர் தற்போது தமிழ்மக்களிற்கு சர்வதேச சமூகம் எந்த வகையில் தீர்வை பெற்றுத்தரப்போகின்றது?.

உலகெங்குமுள்ள தமிழ்மக்கள் தொடர்ச்சியாக ஜனநாயக வழிமுறையில் தமிழின உரிமைகளுக்காகவும் படுகொலைகளுக்கு எதிராகவும் போராட்டங்களை நடாத்திகொண்டிருக்கின்ற போதும் சர்வதேச கண்காணிப்பாளர்களையோ ,மனிதாபிமான அமைப்புகளையோ, சர்வதேச தொண்டர் நிறுவனங்களையோ அனுப்பி அம்மக்களை பாதுகாக்க முடியாத சர்வதேச சமூகம், நடந்தேறிய மனித உரிமை மீறல்களை விசாரணை செய்ய கூட முடியாதிருக்கும் இந்த சர்வதேச சமூகம், வாக்குறுதிகளின் நம்பிக்கையோடு சரணடைய வந்த வடுதலைப்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளரைக் கூட காப்பாற்ற முடியாத இந்த சர்வதேச சமூகத்தை நம்பி செயற்பட்டிருக்கலாம் என்ற வாதம் எந்த நம்பிக்கையையும் தரவில்லையே! எனவே புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் சர்வதேச சமூகத்தின் நிலைப்பாடு தொடர்பாக சரியான கருத்தை தெரிவிக்கவில்லை என்று சொல்வது தேசத்திற்காக ஒய்வின்றி போராடிய அந்த மாவீரனை கொச்சைப்படுத்துவது போன்று தோற்றமளிக்கவில்லையா?

சீன பெருந்தலைவர் சொன்னது போல துப்பாக்கி முனையிலிருந்தே அரசியல் பிறக்கின்றது. அகிம்சை போராட்டம் பயனற்று போனபோது, உருவாக்கம் பெற்ற விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டத்திற்கு பிற்பட்ட காலத்திலேயே தமிழ்மக்களின் உரிமைப்பிரச்சினை முழுஉலகிற்கு முழுஅளவில் கொண்டு செல்லப்பட்டு, அதனுடாக சர்வதேச அளவில் அரசியல் தளமும் தெளிவாக உருவாக்கப்பட்டது. அப்படி சரியாக உருவாக்கப்பட்டதால்தான் பெரும்பான்மை புலம் பெயர் தமிழ்மக்கள் எல்லோரும் ஒரே தலைவன், ஒரு கொடி, ஒரே இயக்கம் என்று இணைந்து செயற்படுகின்றார்கள். ஒரு உறுதியான அரசியல் தளத்தை போடவில்லை என்று கூறுவதில் சரியான அரசியல் தத்துவமாகத் தெரியவில்லை.
அதுமட்டுமில்லாது ஒரு நடைமுறை அரசைக் கட்டிவளர்த்ததினூடாக இராணுவ, அரசியல், நிர்வாக அடித்தளங்கள் மிகச்சீராகக் கட்டமைக்கப்பட்டு நடைபெற்றுவந்ததை தமிழ்மக்களும் உலகமும் அறியும். அதுமட்டுமன்றி, சுனாமியின் பின்னரான ஒழுங்குபடுத்தலினூடாக முழு நிர்வாக திறனையும உலகமே பாராட்டியதன் பின்னரும் தலைவர் இராணுவகட்டமைப்பை மட்டுமே கட்டிவளர்த்தார் என்று சொல்வது பொருத்தமில்லாத ஒன்று. உறுதியான அரசியல் சித்தாந்தம் இல்லாமல் முப்பது வருடமாக இராணுவ இயந்திரம் மட்டுமே கட்டி வளர்க்கப்பட்டது என்பது, ஒரு நோக்கமற்ற இராணுவத்தை கட்டமைத்தது என்ற கருதப்படுவது சாலச்சிறந்ததல்ல. ஏனெனில், அரசியல் விடுதலையை வென்றெடுக்க அகிம்சையை கையிலெடுத்து போராடி, தீர்வுக்கான வாய்ப்புக்கள் இல்லை என்ற அரசியல் யதார்த்த புரிதலின் அடித்தளத்திலேயே இராணுவ இயந்திரம் கட்டிவளர்க்கப்பட்டது என்பது வெளிப்படையான உண்மை. அத்துடன் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் தமிழீழமே தமிழர்களுக்கான அரசியல் தீர்வு என்று கூறி தேர்தலில் நின்ற தமிழர் விடுதலைக்கூட்டணிக்கே மக்கள் வாக்களித்தார்கள் என்பது யாவரும் அறிந்தது.

அரசியல் ரீதியாக அது தோற்றுப் போன போது, அந்த அரசியல் அடித்தளத்தில் தமிழீழத்தை அடைய ஆயுதப்போரட்டமே சிறந்தவழி என இளைஞர்கள் துப்பாக்கிகளைத் தூக்கினர். தலைவர் மட்டுமே சரியான, கட்டுப்பாடான, நேர்மையான, எதற்கும் விலைபோகாத பேரியக்கத்தை கட்டி வழிநடத்தினார். எனவே சரியான அரசியல் அடித்தளத்திலேயே இராணுவ கட்டமைப்பு கட்டிவளர்க்கப்பட்டது. ஆனால் தற்போதைய ஆயுத வலிமைத் தளர்வு என்ற தோற்றப்பாடு ஏற்படுத்தப்பட்டவுடனேயே, சிங்களம் தமிழ்மக்களால் ஏற்றுக்கொள்ளப்படாத 13வது சீர்திருத்தத்தினடிப்படையில் முக்கிய சரத்துக்களை உள்ளடக்காத ஒரு அரைகுறை தீர்வை கொண்டுவர முனைவதிலும், இலங்கை இனப்பிரச்சனை விடயத்தில் தலையிடமுடியாது என்று பிராந்திய வல்லரசு தெரிவிப்பதிலும,; 2002ம் ஆண்டு இனப்பிரச்சனைக்கு தன்னாட்சி, தாயகம், சுயநிர்ணய அடிப்படையில் பேசலாம் என்ற சர்வதேச சமூகம், இலங்கை இனப்பிரச்சனை விடயத்தில் தலையிடமுடியாது என்ற தொனியில் பேசுகின்ற இந்த நிலைமாற்றத்திலும் பிரதான பங்கு வகிப்பது அரசியல்தளமல்ல இராணுவ தளமே என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள். இந்த புறநிலையை சரியாக ஊகித்தே தலைவர் செயற்பட்டார். தமிழ்மக்கள் இப்போதுள்ள புதியசூழலில் தெளிவாக புரிந்த கொள்ள வேண்டிய பல விடயங்கள் உள்ளன.

குறிப்பாக சகல அரசியல் புறச்சூழல்களையும் எதிர்கொண்டு அரசியல், ராசதந்திர, இராணுவ உத்திகளை வகுத்து சிறந்த தளபதிகளையும் பொறுப்பாளர்களையும் போராளிகளையும் உருவாக்கி, தமிழரின் நம்பிக்கையையும் வீரத்தையும் மெருகேற்றி, உலகத்தில் தமிழனின் போராட்ட நியாயத்தை அரசியல் ரீதியாக நகர்த்திய தலைவரை வஞ்சப்புகழ்ச்சி செய்து, தலைவரையும் போராட்டத்தையும் போராளிகளையும் கொச்சைப்படுத்துபவர்களை இனங்கண்டு செயற்படவேண்டும். சிறையகதிமுகாம்களில் துன்புறும் மக்களின் பாதுகாப்பு, சர்வதேச மனிதாபிமான உதவிகளும் நேரடியாக சென்றடைவதற்காக வழிவகைகளையும் காணாமல்போவோர், கைதுசெய்யப்படுவோர், ஏனைய வழிகளில் பாதிக்கப்படுவோர், அடிப்படைவசதிகள் இன்றி தவிக்கும் மக்கள் காப்பற்றப்படக்கூடிய வழிவகைகளை கண்டறிந்து அந்தந்த நாடுகளிலிருக்கும் புலம்பெயர்மக்கள் அங்கு பிரச்சாரங்களையும் சாத்வீக போராட்டங்களையும் முன்னெடுப்பது மிகவும் அத்தியாவசியமான பணியாகின்றது. முக்கியமாக ஆயுதங்கள் மௌனிக்கப்படலாம் ஆனால் தமிழ்மக்களுக்கான சரியான அரசியல் தீர்வு கிடைப்பது உறுதிப்படுத்தப்படும் வரை புலிகளின் இராணுவ பலம் பாதுகாக்கப்பட்டு இருப்பதே தமிழினத்திற்கு என்றும் பாதுகாப்பானது என்பதை யாரும் மறந்து செயற்படக்கூடாது.

Monday, April 20, 2009

ஐயகோ...! அவலத்தின் உச்சம்....!!

ஈழத்தமிழ் மக்கள் மீதான ஒரு மிலேச்சத்தனமான இன அழிப்பின் ஒரு பெரும் அங்கம் நேற்று புது மாத்தளன் பகுதியில் நடந்தேறியுள்ளது. இந்த அழிப்பின் சாட்சிகளாக இங்கே ஒளிப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இதனை எல்லோருக்கும் தெரியப்படுத்துங்கள். எங்கள் மக்கள் அங்கே கொலைவெறி இராணுவத்தால் கொல்லப்படுகின்றனரா? அல்லது விடுவிக்கப்படுகின்றனரா?

இப்படி கண்மூடித்தனமாக தாக்குதல் நடாத்தி ஒரு இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையை மேற்கொள்கிறான் என்பது மட்டும் தெளிவு.

இதோ அந்த சுட்டி...!

சர்வதேசமே உனக்கு கண் இல்லையா? நடப்பது நடக்கட்டும். மிஞ்சுவது மிஞ்சட்டும். என்று என்ன அசட்டையாகவா உள்ளாய்? ஒரு இனத்தின் அவலத்திற்கு இதைவிட உலகில் எங்காவது சாட்சியம் உண்டா? வேரோடு அழிக்கிறான். கூண்டோடு சாய்க்கிறான். இதில் இருக்கும் படங்களை பார்த்த பின்னும் அந்த ஈழமக்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் வரவில்லை என்றால் நீங்கள் மரத்திற்கு ஒப்பானவர்கள்......!சர்வதேசமே நீ மரத்திற்கு ஒப்பாணவன்...!



தயவு செய்து இந்த வலைப்பதிவினை அனைத்து திரட்டிகளின் முதற்பக்கத்திலே வைத்திருந்து எல்லோரும் பார்த்து இந்த வேதனையை எல்லோருடனும் பகிர்ந்து கொள்ள நீங்கள் ஆவன செய்யவேண்டும்.

Thursday, April 16, 2009

இனி அழுவதற்கு கண்ணீர் இல்லை.....!

Monday, March 2, 2009

வன்னி அவலம்...........!

தயவு செய்து இதனை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். குறிப்பாக பிறமொழி மக்களுடன்.

தொடர்கிறது எமது மக்களின் அவலம். யாரும் கண்திறந்து பார்க்காத நிலை. இரக்கமே இல்லாமல் இறுகிப்போன உலக சமூகத்தின் முன் இப்படி இறைஞ்சிக் கேட்டால் கிடைக்குமா விடிவு...! கேள்விகளான எமது வாழ்வின் விடை என்ன? முகவரி இழந்து போவோமா? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்





Monday, February 2, 2009

எரிகுண்டுகளால் எரியும் வன்னி மக்கள்..!

இன்னும் அவலம் தீர்ந்த பாடில்லை. நேற்றையதினம் புத்துக்குடியிருப்பில் சிறிலங்கா அரசபடைகளின் எரிகுண்டு வீச்சால் காயமடைந்தும் கொல்லப்பட்ட மக்களின் புகைப்படங்கள். படங்கள் நன்றி: புதினம்







Wednesday, January 28, 2009

சமர்ப்பணம் : பிரணாப் முகர்ஜி க்கு!

ஈழத்தமிழனின் இடர் தொடர்கிறது. நாதியற்று நிக்கிறான் நடுத்தெருவில். காசா கண்ணுக்கு தெரிகிறது. ஆனால் எம் அவலம் மட்டும் எவருக்கும் தெரியவில்லை. தெரிந்தாலும் கண்மூடி மௌனிகளாக இருக்கின்றனர். காரணம், எமது தந்தை நாடு என நாம் ஆராதிக்கும் இந்தியாவின் அணுகுமுறை. இந்த அவலங்கள் பிரணாப் முகர்ஜிக்கோ அல்லது பிரதம மந்திரிக்கோ அல்லது சோனியா அம்மையாருக்கோ அல்லது கலைஞருக்கோ தெரியாதா (கலைஞருக்கு சத்தியமா தெரியாது , தெரிஞ்சால் இந்த அளவிற்கு மனிதர் எவ்வளவோ செய்திருப்பார்). அல்லது தெரிந்த்தும் எல்லோரும் கலைஞர் போல ஈழத்தமிழன் அழியட்டும் என காத்திருக்கிறார்களா? எல்லோருக்கும் காலம் பதில் சொல்லும். களத்தில் புலி வெல்லும் போது..!

Monday, January 26, 2009

ஷெல் மழை..! இரத்த வெள்ளம்..!! தொடரும் வன்னி அவலம்.!!!

இதை எல்லோருடனும் பகிர்ந்தூ கொள்ளுங்கள். எங்கள் உறவுகளின் சோகக் கதைகளை கேளுங்கள்.







Sunday, January 25, 2009

ஐயோ ஆண்டவா....! காப்பாத்து.....!!

http://www.yarl.com/forum3/index.php?showtopic=50953

தயவு செய்து இந்த சுட்டிக்கு விரையுங்கள். இதை எல்லோருக்கும் தெரியப்படுத்துங்கள். உங்களால் என்ன முடியுமோ அதை செய்யுங்கள். என்னால் இதற்கு மேல் எதுவும் எழுத முடியவில்லை. கண்ணீர் மட்டும் கசிகிறது. இந்த இன்னல்கள் இன்னும் எவரின் காதுக்குள்ளும் விழவில்லையா. அல்லது விழுந்தும் அழியட்டும் என அமைதியாக இருக்கிறார்களா?

சர்வதேசமே கண் திற............!

Monday, January 19, 2009

தொடரும் இடப்பெயர்வுகள்....!

உலக வரலாற்றில் எப்பவும் வன்னிமக்களுக்கே இருக்கப்போகும் ஒரு துன்பமான சாதனை என்ன தெரியுமா? அதிக தடவை இடம்பெயர்ந்த மக்கள் என்பதுதான். காலம் ஒடுகிறது. காலத்துடன் உலகம் தன்னை வளர்த்துக்கொள்ள ஓடுகிறது. ஆனால் ஈழத்தமிழ் மக்களோ தத்தம் உயிர்களை காப்பதற்காக காலம் பூராகவும் ஓட வேண்டி உள்ளது. என்று தணியும் இந்த சுதந்திர தாகம்.

இதுவும் கடந்து போகும். இந்த நிலையும் மாறலாம். என்றதன்மைக்கேற்ப எத்துணை இடர்கள் வந்தாலும், எத்துணை இழப்புகள் நேர்ந்தாலும் கணத்திற்கு கணம் அதிகரிக்கும் உறுதியும் விடுதலையை வென்றெடுக்க வேண்டும் என்ற அந்த பேராவாவும், புலம்பெயர் தமிழர்களின் பாசமான ஆதரவும், தொப்புள் கொடி உறவுகளான தமிழக மக்களின் நெஞ்சார்ந்த நேசமும் உள்ளவரை தொடரும். வேட்கை தணியும் வரை வேங்கைகள் பணியாது.


"தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்"






Sunday, January 18, 2009

ஈழத்தில் தொடரும் அவலம்....!

வன்னி விசுவமடு பிரதேசம் மீது சிறிலங்கா அரசின் கோரப்படைகள் நடாத்திய மிலேச்சத்தனமான தாக்குதலில் இன்று 9 பேர் கொல்லப்பட்டும் 33 பேர் படுகாயமும் அடைந்துள்ளனர். செய்திக்கு புதினம் இணையத்தளத்திற்கு......!






படங்கள் : நன்றி புதினம்

Monday, November 24, 2008

வேதனைகள் தொடர்கின்றன....!

அன்பான உறவுகளே!

ஈழத்தின் நேச உறவுகள் படும் வேதனைகளின் கானொளிக்காட்சி இங்கே. ஒருதரம் உங்களின் விழியையும் செவியயும் செலுத்தி அல்லறும் மக்களின் அவலக்குரலினை கேளுங்கள். அல்லோலகல்லோலப்படும் காட்சிகளை பாருங்கள்.

அங்கு என்ன நிகழ்கிறது என்று எமக்கு தெரியாது என யாரும் சொல்லலாம். எமது அன்பிற்கினிய உறவுகளே நீங்கள் தெரியாது என உரைப்பது நல்லதல்ல. இதனை இதுவரை பார்த்திருப்பீர்கள். இனி மீண்டும் ஒரு தடவை பார்த்து உங்களின் அன்பு உற்றார், உறவினர், நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

ஈழதேச உறவுகளின் வேதனைக்குரலை காதில் ஒலிக்கவிடுவோம்!

ஈழமண்ணின் நித்திய அவலத்தை கண்ணால் காண்போம்!!

அவலம் நீங்கி ஆனந்த வாழ்வு வாழ எம்மால் எது முடியுமோ அதை செய்வோம்!!!

ஊர் கூடித்தேரிழுக்கும் இறுதி நேரம்.

பாசத்திற்குறிய உறவுகளே இதை மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இங்கே கூட நீங்கள் அந்த கானொளிக்காட்சிகளை காணலாம்.

ஏதிலிகளான எம் உறவுகளின் கண்ணீர்க் கதைகள்.....!


எரிகின்ற ஈழமண்ணின் வேதனைகள்.......!

Thursday, November 20, 2008

இலக்கு

ஈழத்தமிழருக்கு எதிராக அந்நிய இராணுவங்கள் மேற்கொண்ட அடாவடித்தனங்கள், கொலைகள், கற்பழிப்புகள், திட்டமிட்ட சுத்திகரிப்புகள் என்பவற்றை சற்றே ஆதார பூர்வத்துடன் கொணர்வதாக இருக்கிறது. இயலுமான வரை எல்லா நிகழ்வுகளையும் பதிய உள்ளோம்.

இது ஒரு ஆரம்பம். பின்னர் இதுவும் கடந்து போகும்.

வணக்கம்!

ஒரு பதிவினை இட்ட பின்னர் இந்த வணக்கம். இருந்தாலும் ஈழமண்ணின் வேதனை சொல்லும் வலைப்பூ இது என்பதால் வணக்கம் எப்போது சொன்னாலும் பதிவர்கள் ஏற்றுக்கொள்வார்கள். நன்றி

Tuesday, October 21, 2008

ராஜீவ் காந்தியின் தீபாவளிக் கொண்டாட்டம்...!

1987 ம் ஆண்டு ஈழத்தமிழர் வாழ்வில் நிறையவே நடைபெற்றது. இந்தியா அமைதிப்படை என்ற போர்வையில் ஒரு அழிப்புப்படையை ஏவிவிட, அது விடுதலைப்புலிகளை அழிக்கிறோம் என்ற போர்வையில் அப்பாவிகளை பலியெடுத்தது. விமானத்தில் இருந்து முதலில் உணவுப்பொட்டலங்கள். பின்னர் ஒப்பந்தம். திலீபனின் உயிர் பறிப்பு. குமரப்பா, புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் தீருவில் தீ. முதல் பெண் மாவீரர் ஆகி மாலதி மரணம். இன்னும் இன்னும். அதன் தொடர்ச்சியாய் அப்பாவிகள் மீதான படுகொலை.

ஒக்ரோபர் 21, 1987 அன்று பாரத மக்கள் ஏன் அனைத்து இந்து மக்களும் நரகாசுரனை வதம் செய்த தீபாவளி திருநாளை குதூகலமாக கொண்டாடுகிறார்கள். ஆனால் யாழ்ப்பாணக் குடாநாடோ சோபையிழந்து அந்நிய இராணுவத்தின் அகோரப்பிடிக்குள் அகப்பட்டு சின்னாபின்னமாகி கொண்டிருந்தது. யாழ்ப்பாண கோட்டையில் இருந்து இந்திய இராணுவம் வடக்கு நோக்கி ஒரு முன்னேற்ற முயற்சியில் இறங்கியது. அதற்கு ஆதரவாக கோட்டையில் இருந்து செறிவான எறிகணைத் தாக்குதல் நடாத்தப்படுகிறது. அது யாழ்ப்பாணத்தின் எல்லாப் பாகங்களிலும் விழுந்து வெடிக்கிறது. மக்கள் அல்லோலகல்லோலப்பட்டு அலறியடித்துக்கொண்டு ஓடுகிறார்கள். நிறைய எறிகணைகள் யாழ் மருத்துவமனையை பதம் பார்க்கிறது. பாதுகாப்புக்கு வைத்தியசாலை சிறந்தது என் எண்ணி அதற்குள் ஏராளமானோர் நுழைகிறார்கள். மதியம் ஆரம்பித்த தாக்குதல் இடைவெளி இன்றி தொடர்கிறது.
இப்போது எறிகணைகள் மருத்துவமனையின் நோயாளர் விடுதிகளிலும் வீழ்ந்து வெடிக்கிறது. எல்லோரும் கதறியழுதவாறு சிதறி ஓடுகிறார்கள். சிலர் மேல்மாடியில் இருக்கும் எக்ஸ்ரே அலுவலக அறைக்கும், வைத்தியசாலை அலுவலக அறைக்கும் ஓடுகிறார்கள். மேல்மாடி என்பதால் பாதுகாப்புக்கு உகந்தது என எண்ணியிருக்க கூடும். இதற்குள் காயம் அடைந்தவர்கள் ஒருபுறம். உயிர் பிரிந்த உடலமாக கிடந்தவர்கள் ஒருபுறம். மாலை 4.40 மணியளவில் இராணுவம் மேற்கு பக்கமாக வைத்தியசாலைக்குள் நுழைகிறது. ஊழியர்கள் தமது சீருடைகளை தரித்து நிற்கின்றனர். மருத்துவர்களும் தத்தமது உடைகளை அணிந்து அச்சத்துடன் செய்வதறியாது நிற்கின்றனர். இராணுவம் சுட்டபடி உள்ளே நுழைகிறது.
"நாங்கள் ஊழியர்கள்" என்று ஆங்கிலத்தில் ஊழியர்கள் கத்துகிறார்கள். நாங்கள் "சிவிலியன்ஸ்" எனப் பொதுமக்கள் கத்துகிறார்கள். இரத்த வெறி பிடித்த இந்திய இராணுவத்திற்கு இது விளங்குமா? சுட்டுத்தள்ளுகிறது. ஐயோ அம்மா! முருகா! முருகா!! என குழறல் சத்தம் கேட்கிறது. பின்னர் சூட்டுச் சத்தம். இப்போது அந்த குழறல் சத்தங்கள் அடங்குகிறது. நிலைமை மோசமாகிவிட்டதை உணர்ந்த அப்பாவி நோயாளர்கள் இங்கும் அங்கும் திகிலுடன் ஓடுகிறார்கள். அங்கே நின்ற ஒரு சிறுவனும் (வயது 15) சிதறி ஓடுகிறான். அவனது தந்தை ஒரு வைத்தியசாலை ஊழியர். இப்படி ஒவ்வொரு விடுதியாக இராணுவம் நுழைந்து தனது மிலேச்சத்தனமான கைவரிசையை காட்டி கொண்டிருக்க இருள் சூழ்ந்து கொண்டது. எல்லோரையும் பயம் கவ்விக்கொண்டது. செய்வதறியாது கட்டில்களுக்கு கீழே படுத்தவர்களும், இறந்தவர்களோடு இறந்தவர்களாக பாவனை செய்து படுத்தவர்களும் என நோயாளர்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு இருந்தனர். இரவு எங்காவது காயம் அடைந்தவர்களின் முனகல்சத்தம் கேட்கும். அந்த இடத்தை நோக்கி 'டுமீல்' 'டுமீல்' என துப்பாக்கி ரவை பாயும். பின்னர் அந்த சத்தம் அடங்கி விடும். இவ்வாறு அன்று இரவு முழுவதும் முனகல் சத்தமும் பின்னர் சூட்டுச் சத்தமும் நடந்தது. ஏன் என கேட்காமல் அப்பாவிகளை சுட்டுத்தள்ளி தனது கொலைவெறிகளை தீர்த்துக்கொண்டது.
அடுத்தநாள் காலை விடிந்தது(22-10-1987). காலை 8மணியளவில யாரோ ஒரு பெரியவர் இராணுவத்துடன் நோயாளர்களுக்காகவும் நிலைமைகளுக்காகவும் வாதாடினார். பின்னர் வழமைபோல சூட்டுச்சத்தம். ஆட்கள் அலறித்துடித்தபடி வீழ்ந்தனர். அவர் வேறுயாருமல்ல வைத்திய நிபுணர், கலாநிதி அ.சிவபாதசுந்தரம். அவரோடு இறந்தது சில தாதிமார்கள். இச்சத்தம் எல்லா விடுதிகளுக்கும் கேட்டது. மிகுதியாக உயிருடன் இருந்தவர்களை இது உலுப்பி எடுத்தது. என்ன நடக்கும் என அச்சத்தில் இருந்தார்கள்.
10.30 மணி உயிருடன் இருப்பவர்களை கைகளை உயர்த்தியபடி வெளியே வரச்சொல்கிறது இராணுவம். அச்சத்துடன் எல்லோரும் என்னநடக்குமோ என எண்ணியபடி வெளியே வருகிறார்கள். அங்கே இறந்த உடல்கள் எல்லாம் பனங்கிழங்கு அடுக்கியது போல கிடந்தது. வீங்கிய உடல்கள். சிதறிய உறுப்புகள் என பார்ப்பதற்கு கோரமாக இருந்தது. அதற்குள் காயப்பட்டு குறை உயிரில் இருந்தவர்களும் அடங்குவர். அந்த சிறுவனும் நண்பனும் வெளியே வருகிறார்கள். அவனுடைய தாயாருடன் ஒரு தம்பி முன்னே செல்வதை காண்கிறான். வெளியே செல்கிறான். ஆனால் அவனது தந்தையாரையும் இரண்டு தம்பிமாரையும் காணவில்லை. எண்ணங்கள் பலவாறாக ஓடுகிறது அவனுக்கு. விறாந்தையில் கிடந்த உடல்கள் இரத்தவெள்ளத்தில் கிடந்தது. இரத்தவாடை மிக மோசமாக இருந்தது. உடலங்களுக்கும், இரத்தவெள்ளத்திற்குள்ளாலும் எல்லோரும் வெளியே வருகிறார்கள். கைகளை கூப்பியபடி கிடக்கும் உடலங்கள் (கும்பிட கும்பிட சுட்டிருப்பார்கள்), மகனை கட்டியணைத்தபடி கிடக்கும் தாய், தந்தை உடலம் என மிகவும் உருக்கமாகவும் கோரமாகவும் காட்சியளித்தது.
அவன் தந்தையை தேடினான். எங்கும் காணவில்லை. இரவு சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களில் உற்வினர் இருந்தால் பார்ப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர். அவனும் சென்று பார்க்கிறான். அங்கே அவனது தந்தையின் உயிரற்ற உடலத்தைப் பார்க்கிறான். திகைத்துப்போகிறான். தம்பிமாரை காணவில்லை. அங்கே காயமடைந்த ஒருவர் சொல்கிறார், "தம்பி உங்கள் அப்பா காயமடைந்த ஒருவர் தண்ணீர் கேட்ட போது, மேசையில் இருக்கும் தண்ணீரை எடுத்துக் கொடுக்க முயன்ற வேளை சிப்பாய் ஒருவனால் சுடப்பட்டு இறந்தார். மனம் கொதித்தான். இருந்தும் நிலைமை மோசம். என்ன செய்ய முடியும்.

இனி தகனக்கிரியைகளை நடத்தவேண்டும் என ஒரு வைத்தியரை அணுகிகேட்க, அவரும் இராணுவத்துடன் தொடர்பு கொண்டார். பிரேத அறைக்கு அருகில் இருந்த வெளியில் எல்லோர் சடலங்களையும் அடுக்கி வைத்திருந்தனர். அந்த சிறுவனின் தந்தையின் உடலை ஒரு கரையாக வைத்து தீயை மூட்ட சொன்னார்கள். அவனும் தீயை மூட்டினான். அவனை கொண்டே ஏனைய உடல்களுக்கும் தீ மூட்டுவித்தனர். எல்லோர் உடல்களும் தீயுடன் சங்கமமாகியது. 15வயது சிறுவன் 70ற்கு மேற்பட்ட உடலங்களுக்கு தீ வைக்கிறான். இந்த கொடுமை எங்கும் நடக்குமா.

ஒருமாதத்தின் பின்னர் அவனது தம்பியரைக் கண்டுபிடித்தான் அந்த சிறுவன். அவர்கள் கூறினர். "உங்களை இராணுவம் சுடத்தான் (22.10.1987 காலை) கூட்டிக்கொண்டு போறான் என நினைத்து, நாம் காயப்பட்டவர்களுடன் கிடந்து பின்னர் நல்லூரிற்கு தப்பி ஓடி வந்தோம் என்றனர்.

இந்திய இராணுவத்தின் இந்த காட்டுமிராண்டித்தனத்தால் 70 ற்கு மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்டணர். அவர்களில் 23 வைத்தியசாலை ஊழியர் அடங்குவர். மூன்று சிறப்பியல் வைத்திய நிபுணர்களும் அடங்குவர். விபரம்....
  • வைத்திய கலாநிதி அ. சிவபாதசுந்தரம்
  • வைத்திய கலாநிதி எம்.கே. கணேசரட்ணம்
  • வைத்திய கலாநிதி பரிமேலழகர்
  • தலைமைத்தாதி திருமதி வடிவேலு
  • தாதி திருமதி லீலாவதி
  • தாதி திருமதி சிவபாக்கியம்
  • தாதி ராமநாதன்
  • வாகன ஓட்டுநர் சண்முகலிங்கம்
  • தொலைபேசி இயக்குநர் கனகலிங்கம்
  • கள மேற்பார்வையாளர் கிருஷ்ணராஜா
  • கள மேற்பார்வையாளர் செல்வராஜா
  • கோ.உருத்திரன்
  • க.வேதாரணியம்
  • இரத்தினராஜா
  • மு.துரைராஜா
  • மெ.வரதராஜா
  • இரா.சுகுமார்
  • க.சிவராஜா
  • க.சிவலோகநாதன்
  • சி.ஜெகநாதன்
  • இரா.சுப்பிரமணியம்
  • எஸ்.மார்க்கண்டு
  • க.பீற்றர்

இன்று அந்த சிறுவன் ஒரு விடுதலைப் போராளி. எவைகள் எமது போராளிகளை உருவாக்குகின்றன். எவைகள் எமது விடுதலைப் போராட்டத்தை விரைவு படுத்தும் என்பதற்கு இவை சான்றுகள்.

ஈழத்தமிழர் வாழ்வில் நடைபெற்ற இந்த துன்ப நிகழ்வுகளின் பதிவுகள் தொடரும்....!

இதே தினத்தில் கொல்லப்பட்ட அனைவருக்கும் எமது கண்ணீர்ப்பூக்களை காணிக்கையாக்குகின்றோம்.

"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"

படங்கள் நன்றி : தமிழ்நெற், State Terrorism, TamilNation